போராட்ட காலத்திலேதான் எனது அரசியல் வாழ்வு ஆரம்பிக்கப்பட்டது. எனினும், போராட்டங்களாகவே எனது அரசியல் வாழ்வு மாறிவிட்டது’ என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.
வன்னி மாவட்டத்தில், ஐக்கிய மக்கள் சக்தியில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து, நகர சபைத் தலைவர் நஹுஸீன் தலைமையில், மன்னார், உப்புக்குளத்தில் நேற்று மாலை (23) இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பங்கேற்று, உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
தொடர்ந்து உரையாற்றிய முன்னாள் அமைச்சர் ரிஷாட்,
“19 வருட அரசியல் பயணத்தில், எல்லாக் காலமும் போராட்டத்துடனேயே நீச்சலடித்து வருகிறேன். உங்கள் ஊரான உப்புக்குளத்தில் ஓர் ஆர்ப்பாட்டம் நடந்தபோது, அது முடிந்த பின்னரேயே கொழும்பிலிருந்து நான் இங்கு வந்தேன். என்னுடன் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர், ஹுனைஸ் பாரூக்கும் வந்திருந்தார். பிரச்சினைகள் முடிந்த பின்னர், நாம் இங்கு வந்த போதும், நடந்த அனைத்துப் பிரச்சினைகளையும் என்தலையில் கட்டி, நீதிமன்றப் படிக்கட்டுக்களை ஏற வைத்தார்கள். அங்கு கைகட்டி நிற்கும் நிலையை ஏற்படுத்தினார்கள் என்பதை நீங்கள் நன்கு அறிவீர்கள்.
அதேபோன்று, “வில்பத்துப் பிரச்சினை’ என்ற போர்வையில் என்னை பாடாய்ப்படுத்தி வருகிறார்கள். முசலிப் பிரதேசத்தில் உள்ள கரடிக்குளி, பாலைக்குளி, மறிச்சுக்கட்டியில் முன்னர் வாழ்ந்த மக்களை மீண்டும், அவர்களது சொந்தக் காணிகளில் குடியேற்றம் செய்ததற்காக, “வில்பத்துவை அழிக்கின்றேன்” என பிரச்சாரத்தைக் கட்டவிழ்த்துவிட்டார்கள். இனவாதத் தேரர்களால் ஆரம்பித்து வைக்கப்பட்ட இந்தப் பிரச்சார நாடகம், இன்று வரை என்மீதான வழக்குகளாக மாறி நீதிமன்றத்தில் உள்ளன. இவைதான் எங்களுக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள்.
எனது 19 வருட அரசியல் வாழ்வில், இதுவரை எந்த தனிப்பட்ட குற்றச்சாட்டு தொடர்பிலும், பொலிஸிலோ நீதிமன்றத்திலோ, முறைப்பாடோ வழக்குகளோ இல்லை. இந்த அரசாங்கம் தமது அதிகாரத்தைப் பயன்படுத்தி, பயங்கரவாதச் சம்பவத்துடன் என்னையும் தொடர்புபடுத்தி, விசாரணைகள் என்ற போர்வையில் அடிக்கடி அழைக்கின்றனர். இது தொடர்பில் பல நாட்கள், பல தடவைகள் விசாரிக்கப்பட்டும் பின்னர், இறுதியாக 10 மணித்தியாலம் விசாரிக்கப்பட்டேன். இப்போது மீண்டும் 27 ஆம் திகதி விசாரணைக்கு வருமாறு நீதிமன்ற உத்தரவு பெற்றிருக்கின்றார்கள்.
இவ்வாறுதான் எனது சகோதரர் ரியாஜ் பதயுதீனை “இரண்டு நாட்களில் விடுவித்து விடுவோம்” எனக் கூறி அழைத்துச் சென்றவர்கள், 100 நாட்கள் வரை நியாயமின்றி தடுத்து வைத்துள்ளனர். அதேபோன்று, எனது மற்றைய சகோதரர் ரிப்கான் தொடர்பில், பொய்யான வாக்குமூலம் ஒன்றை வழங்கிய முன்னாள் புலனாய்வு அதிகாரி ஒருவர், சஹ்ரான் தப்பிச் செல்வதற்கு அவர் உதவியதாகக் கூறினார். வாக்குமூலம் அளித்த அடுத்த நாள் மீண்டும் அந்த அதிகாரி சென்று, “அது ரிப்கான் அல்ல ரியாஜ் பதியுதீன்” என்று வாக்குமூலம் ஒப்புவிக்கின்றார். ஆனால், இந்தியாவுக்கு சஹ்ரான் போகவே இல்லை என்று இந்திய உளவுப்பிரிவு அறிவித்ததாக, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அண்மையில் கூறியுள்ளார்.
“உயிர்த்த ஞாயிறு தாக்குதலிலோ, வேறு எந்த பயங்கரவாத சம்பவத்துடனோ ரிஷாட் பதியுதீனுக்கு எந்தச் சம்பந்தமும் இல்லை” என, தற்போதிருக்கும் பொலிஸ்மா அதிபரே அப்போது பாராளுமன்றத் தெரிவுக்குழுவுக்கு, தனது கையெழுத்திட்டு அறிக்கை வழங்கினார். இப்போது, 15 மாதங்கள் கடந்த பின்னர், மீண்டும் என்னை விசாரணைக்கு வருமாறு, தேர்தல் காலத்தில் அழைப்பதன் நோக்கம்தான் என்ன?” என்றார்.
இந்தக் கூட்டத்தில் வேட்பாளர்களான சட்டத்தரணி ஹுனைஸ் பாரூக், பகீரதன், ரஞ்சன் குரூஸ் ஆகியோரும் உரையாற்றினார். கட்சியின் கண்டி மாவட்ட அமைப்பாளர் ஹம்ஜாட், கண்டி மாவட்ட இணைப்புச் செயலார் ரியாஸ் இஸ்ஸதீன். குருநாகல் மாநகர சபை உறுப்பினர் அசார்தீன் உட்பட ஊர்ப்பிரமுகர்கள் பலரும் பங்கேற்றிருந்தனர்.
0 Comments